Published : 21 Feb 2024 05:15 AM
Last Updated : 21 Feb 2024 05:15 AM

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிநிரவல்: பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

கோப்புப்படம்

சென்னை: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

கூட்டு மேலாண்மை நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவர்களை அந்த நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பிற பள்ளிகளில் தகுந்த காலிப் பணியிடங்களில் பணி நிரவல் செய்ய வேண்டும். ஆனால், கூட்டுமேலாண்மை பள்ளிகளால் அதே நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பிற பள்ளிகளில் தகுந்த காலிப்பணியிடம் இருந்தும் பணிநிரவல் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அவ்வாறு பணிநிரவல் செய்ய தவறிய நிலையில் உரிய விதிகளை பின்பற்றி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டத்துக்குள் பள்ளிக் கல்வி இயக்குநரால் பணி நிரவல் செய்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், சிறுபான்மை பள்ளி நிர்வாகம் தங்களிடம் உள்ள அரசுமானியம் பெறும் நிரப்ப தகுந்தகாலியிடங்களுக்கு பிற பள்ளிகளில் இருந்து உபரி ஆசிரியர்களை ஈர்த்துக் கொள்ள ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய கோரிக்கைகளுக்கு உடனே பணிநிரவல் ஆணை வழங்க வேண்டும்.

அதன்படி கூட்டு மேலாண்மை பள்ளி மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிநிரவல் முடிந்த பின்னர், அதில் எஞ்சிய உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் நடவடிக்கையானது எமிஸ் வலைதளம் வழியாக மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த கல்வியாண்டு நிறைவடைய உள்ள நிலையில், பணிநிரவலாகும் உபரி ஆசிரியர்களை இந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாளில் புதிய பள்ளியில் பொறுப்பேற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x