Published : 01 Feb 2024 05:21 PM
Last Updated : 01 Feb 2024 05:21 PM

6 வகுப்பறையும், 600 மாணவர்களும்... @ தென்காசி - வினைதீர்த்தநாடார்பட்டி

மிகவும் குறுகிய இடத்தில் செயல்படும் வினைதீர்த்த நாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி.

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி ஊராட்சியில் நாராயணப்பேரி குளத்துக் கரையை ஒட்டி வினைதீர்த்தநாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், 6 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. விளையாட்டு மைதானம், ஆய்வகம், நூலகம் போன்றவை இல்லை.

சைக்கிள் நிறுத்த வேண்டிய இடத்திலும், அருகில் உள்ள இ-சேவை மையத்திலும், மரத்தடி நிழலிலும் வகுப்பு நடைபெறும் நிலை உள்ளது. நடப்பு கல்வியாண்டில் இப்பள்ளி மாணவர்கள் இருவர் தமிழக அரசின் ‘இன்ஸ்பரேஷன்’ விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தற்போது பள்ளி செயல்பட்டு வரும் இடம் மிகவும் குறுகியதாக இருப்பதால் மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சைக்கிள் நிறுத்துமிடம், நூலகம், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லை.

பள்ளியின் இருபுறங்களில் நீர்நிலை, விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன. “பள்ளியில் இருந்து சிறிது தொலைவில் பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 4.76 ஏக்கர் இடம் உள்ளது.

இந்த இடம் மூலம் பல ஆண்டுகளாக கோயிலுக்கு எந்த வருமானமும் இல்லை. பராமரிப்பின்றி முள்புதர்களாக, குப்பை சூழ்ந்து கிடக்கிறது. அந்த இடத்தை நீண்டகால குத்தகைக்கு பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கு கொடுத்தால், மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள். குத்தகையை கல்வித்துறை செலுத்துவதற்கு சிக்கல் இருந்தால், அதையும் செலுத்த தயாராக உள்ளோம்” என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 26-ம் தேதி நடந்த திப்பணம்பட்டி கிராம சபை கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை, அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று திப்பணம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் ஐவராஜா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து திப்பணம்பட்டியைச் சேர்ந்த சாரல் சசிகுமார் கூறும்போது, “திப்பணம்பட்டி சுற்று வட்டார பகுதி மாணவர்களின் நலன்கருதி, வினைதீர்த்தநாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நீண்டகால கோரிக்கையான அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x