Published : 21 Dec 2023 05:46 AM
Last Updated : 21 Dec 2023 05:46 AM

பொதுத்தேர்வுக்கு உதவும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம்

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்துள்ள வினா-வங்கி புத்தகத்தை சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் (பிடிஏ) சார்பில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக வினா வங்கி புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வினா வங்கி புத்தகங்களை வெளியிட்டார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக வினா வங்கி புத்தகங்கள் அச்சிடப்படவில்லை. இந்த ஆண்டு 2 லட்சம் வினா வங்கி புத்தகங்களை அச்சிட்டுள்ளோம். பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

கனமழையால் தென்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளன. இம்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை கணக்கெடுத்து வருகிறோம். அவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் விரைவில் வழங்கப்படும். மழை பாதித்த பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே வகுப்புகள் தொடங்கப்படும். பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் முத்துக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாதிரி வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள் (வினா-வங்கி), கணித தீர்வு புத்தகம், கணித 'கம்' புத்தகம் (தமிழ் மற்றும் ஆங்கில வழி) அனைத்து மாவட்ட விற்பனை மையங்களிலும் கிடைக்கும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கோடம்பாக்கம் பதிப்பக செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு எம்சிசி மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலை ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி, திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 இடங்களில் விற்பனை மையங்கள் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மழை பாதித்த பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே வகுப்புகள் தொடங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x