Last Updated : 16 Nov, 2023 07:40 PM

 

Published : 16 Nov 2023 07:40 PM
Last Updated : 16 Nov 2023 07:40 PM

100+ அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்கள் - விருதுநகரில் தொடங்கியது 2-வது புத்தகத் திருவிழா!

விருதுநகர்: நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்களுடன் விருதுநகரில் 2-வது புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி திடலில் 2வது புத்தகத் திருவிழா இன்று காலை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் புத்தகத் திருவிழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ''புத்தகங்கள் நம் வாழ்க்கையில் ஒரு பகுதி. தொடர் வாசிப்பின் மூலம் அறிவு வளமும், புதிய கவிதைகளும் கிடைக்கும். வலைதளங்களில் பரவும் 100 தகவல்கள்களில் 90 தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையாக உள்ளன. ஆதானால், எந்த தவலையும் உறுதிபடக் கூறுவது புத்தகங்கள்தான். புத்தகம் வாங்குகள், படியுங்கள், அறிவை பெருக்குங்கள்'' என்றார்.

மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் பேசுகையில், ''சமூக வலைதளங்களில் ஏராளமான செய்திகள் பரவுகின்றன. எது உண்மை, எது பொய் என பிரித்து உணர்வுவதுதான் இந்த தலைமுறையும், அடுத்த தலைமுறையும் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையாகும். புத்தங்கள் வாசிப்பு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்ல, பலரது வாழ்க்கையையே மாற்றியுள்ளது. புத்தக வாசிப்பு என்பது அறிவு சமுதாயத்தின் அடையாளம். அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது புத்தகங்கள்தான். அச்சுக்காலத்தைத் தொடர்ந்து புத்தகங்கள் கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. இப்புத்தகத் திருவிழா அறிவின் அடையாளம்'' என்றார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர்மணி, கலை நன்மணி, கலைமதுமணி விருதுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள், எம்.எல்.ஏ. சீனிவாசன், சிவகாசி மாநகாட்சி மேயர் சங்கீதா, விருதுநகர் நகராட்சித் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இப்புத்தகக் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்புகள், பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கண்காட்சியைப் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகித தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

அதோடு, மாணவர்கள், சிறுவர்களைக் கவரும் வகையில் முப்பரிமான அறிவியல் திரைகாட்சி அரங்கம், சிறிய அளவிலான கோளரங்கம், தமிழ்ப் பாரம்பரிய இசைக்கருவிகள் அரங்கம், விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி அரங்கம், அறிவோம் பயில்வோம் அரங்கம், வெம்பக்கோட்டை அழாய்வில் கிடைத்த தொல்பொருள்கள் அரங்கம், சிறுவர்களுக்கான விளையாட்டரங்கம் மற்றும் உணவரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 27ம் தேதி வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில், தினந்தோறும் காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகும், மாலையில் சிறப்பு விருந்தினர்கள் சொற்பொழிவும் நடைபெறுகின்றன.

இந்து தமிழ் திசை அரங்கம்: விருதுநகரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 95-வது அரங்கில் இந்து தமிழ் திசை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டுள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியைப் பார்வையிட வந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஏராளமானோர் இந்து தமிழ் திசை அரங்கை ஆர்வத்துடன் பார்வையிட்டதோடு புத்தகங்களையும் மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றனர். இந்து தமிழ் திசை அரங்கில் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகித சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x