Published : 30 Oct 2023 04:00 AM
Last Updated : 30 Oct 2023 04:00 AM

அரசு ஊழியர்களின் உயர் படிப்புக்கு ஒருமுறை ஊக்கத்தொகை: மனிதவள மேம்பாட்டுத் துறை அரசாணை வெளியீடு

சிவ்தாஸ் மீனா | கோப்புப் படம்

சென்னை: அரசு ஊழியர்கள் உயர் படிப்புக்கு ஒருமுறை கணிசமான ஊக்கத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள் தங்களின் கல்வித் தகுதியை உயர்த்தும் போது அதற்கான ஊக்கத் தொகை பெற்று வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், உயர் கல்வியில் சேருவோர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

மேலும், பி.டெக், பிஎஸ்சி வேளாண்மை, எம்பிஏ உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்களும் தற்போது அரசு ஊழியர்களாகும் முயற்சியில் உள்ளனர். இவர்களுக்கான உயர் தகுதி அடிப்படையில் தேவையான ஊதிய உயர்வு வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த 2020, மார்ச் மாதம், கூடுதல் தகுதிக்கான ஊக்கத் தொகை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப். 7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், “அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக்காலத்தில் பெறும் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

அரசுப் பணியாளர்கள் பெறும் கூடுதல் கல்வித் தகுதியின் மூலம் அவர்களின் பணித்திறன் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் வகையில், உயர் கல்வித் தகுதிகளுக்கான ஊக்கத் தொகை மத்திய அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையடுத்து, 2020-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதிக்குப் பிறகு அரசு ஊழியர்கள் பெறும் கூடுதல் கல்வித்தகுதிக்கேற்ப அவர்களுக்கான ஒருமுறை கணிசமான ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பாக 2021-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, பிஎச்டி முடித்தால் ரூ.25 ஆயிரம், முது நிலை பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றால் ரூ.20 ஆயிரம், பட்டப்படிப்பு,

பட்டயம் முடித்தால் ரூ.10 ஆயிரம் வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதன் படி, ஏற்கெனவே ஊக்கத் தொகை கேட்டு விண்ணப் பித்துள்ளவர்களுக்கும் சேர்த்து ஊக்கத் தொகை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப் படுகின்றன.

அதன்படி, அந்தந்த பதவிகளுக்கு தேவைப்படும் என வகுக்கப்பட்ட கல்வித் தகுதியை கூடுதலாக பெறுபவர்களுக்கு இந்த ஊக்கத் தொகை கிடையாது. அனைத்து பதவி நிலைகளில் உள்ளவர்களுக்கும் இந்த கணிசமான ஊக்கத் தொகை ஒரே மாதிரியாக இருக்கும். அரசால் ஸ்பான்சர் செய்யப்படும் போதோ, கல்விக்காக விடுப்பு எடுத்து கூடுதல் தகுதி பெற்றாலோ ஊக்கத் தொகை கிடையாது.

பணியில் சேர்ந்த பிறகு பெறும் கூடுதல் கல்வித் தகுதிக்கே ஊக்கத் தொகை வழங்கப்படும். பல்கலைக்கழக மானிய குழு, ஏஐசிடிஇயால் அங்கீகரிக்கப்படும் கல்வித் தகுதிகளுக்கு மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்படும். ஒரு பணியாளரின் பணிக்காலத்தில் இரண்டு ஊக்கத் தொகை பெறுவதற்கான அனுமதி உண்டு.

ஒரு கல்வித் தகுதிக்கும் மற்றொரு தகுதிக்கும் இடையில் 2 ஆண்டுகள் இருக்க வேண்டும். அரசுப் பணியாளர் உயர் கல்வி முடித்த 6 மாதங்களுக்குள் ஒரு முறை கணிசமான ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். துறையால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஊக்கத் தொகை பெற முடியாது. இதுவரை முன் தேதியிட்ட ஊதிய உயர்வு பெறாத பணியாளர்களுக்கு மட்டுமே இந்த ஊக்கத் தொகை பெற தகுதியுண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x