

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் தனியார் பள்ளிகளில் 97.83 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை மொத்த உள்ள 180 தனியார் பள்ளிகளில் இருந்து 4,230 மாணவர்களும், 3,851 மாணவிகளும் என மொத்தமாக 8,081 மாணவர்கள் எழுதினர்.
தேர்வு முடிவு இன்று வெளியாகின. இதில் 4,100 மாணவர்களும், 3,806 மாணவிகளும் என மொத்தமாக 7,906 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 97.83 சதவீதமாகும்.
புதுச்சேரியில் 3,750 மாணவர்களும், 3311 மாணவிகளும் என 7,061 பேர் தேர்வு எழுதினர். இவற்றில் 3,651 (97.36 சதவீதம்) மாணவர்களும், 3271 (98.79 சதவீதம்) மாணவிகளும் என 6922 (98.03 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காரைக்காலில் 480 மாணவர்களும், 540 மொணவிகளும் என மொத்தம் 1020 பேர் தேர்வு எழுதினர். இதில் 449 (93.54 சதவீதம்) மாணவர்களும், 535 (99.7 சதவீதம்) மாணவிகளும் என மொத்தம் 984 (96.47 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் புதுச்சேரி, காரைக்காலில் மொத்த உள்ள 180 தனியார் பள்ளிகளில் 123 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக புதுச்சேரியில் 101 பள்ளிகளும், காரைக்காலில் 22 பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
அதோடு புதுச்சேரி, காரைக்காலில் பிரெஞ்சு-8, ஆங்கிலம்-5, கணிதம்-34, அறிவியல்-69, சமூக அறிவியல்-3 என மொத்தமாக 119 மாணவ, மாணவிகள் பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.