Published : 04 Aug 2023 03:06 PM
Last Updated : 04 Aug 2023 03:06 PM

இடைநிற்றல் மாணவர்களின் கல்வி தொடர இடையராது பாடுபடும் ஆசிரியர்கள் @ நீலகிரி

இடைநிற்றல் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் முருகேசன். (அடுத்த படம்) மடிக்கணினி மூலமாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் குன்னூரை அடுத்த சோகத்தொரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை.

உதகை: பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி இடைநிற்றலால் கல்வியை தொடராமல் விட்டுவிடுகின்றனர். இவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வந்து, கல்வியை தொடர ஆசிரியர்கள் வழி வகை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆசிரியர் ஒருவர் தனியார் பள்ளி போன்று தொழில்நுட்ப உதவியுடன் பாடங்கள் நடத்துகிறார். இதேபோல, மற்றொரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர், தன்னார்வலர்களுடன் இணைந்து இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து கல்வியை தொடர செய்து வருகிறார்.

அதன்படி, குன்னூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளிக்கு இணையாக கல்வி கற்று வருகின்றனர். இப்பள்ளி, சோகத்தொரை பகுதியில் உள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த, கிராம மக்களுடன் இணைந்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியை சுமதி மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால், பல்வேறு வகையில் இப்பள்ளி முன்னேறி வருகிறது. தனியார் அமைப்பு மூலமாக பள்ளிக்கு பல்வேறு உதவிகள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், பள்ளி வளாகத்தில் சிமென்ட் தரைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு, 5 மடிக்கணினிகளை முன்னாள் மாணவர் தீப்பு சிவயோகி அளித்துள்ளார். இந்த ஆண்டு காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று மாணவர்கள் பரிசுகள் பெற்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள் ளதால், தனியார் பள்ளிக்கு இணையாக இப் பள்ளி இயங்கி வருகிறது.

இதேபோல, பந்தலூர் தாலுகா பிதர்காடு பகுதியை அடுத்த பென்னை கிராமத்தில் 8-ம் வகுப்பு முடித்து, உயர்நிலைப் படிப்புக்கு செல்லாமல் பழங்குடியின மாணவர்கள் இருந்தனர்.

பென்னை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் முருகேசன், இடைநிற்றல் மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கல்வியின் முக்கியத்துவம், பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க அரசு நிறைவேற்றி வரும் எண்ணற்ற திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்து, மீண்டும் அவர்களின் படிப்பை தொடர வலியுறுத்தி வருகிறார்.

இதையடுத்து, அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களுடைய இரண்டு குழந்தைகளை 9-ம் வகுப்பில் சேர்க்க இசைவு தெரிவித்தனர். அதன்படி, தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தெய்வலட்சுமி, ஐயப்பன் ஆகியோரின் உதவியோடு, அந்த குழந்தைகள் அம்பலமூலா பகுதியிலுள்ள உண்டு, உறைவிட பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

பென்னை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் முருகேசன் கூறும் போது, ‘‘அறிமுகம் இல்லாதவர்களை பழங்குடியின மக்கள் நம்புவதில்லை. அவர்களது நம்பிக்கையை பெற அவர்களு டன் தொடர்பிலேயே இருக்க வேண்டும். தொடர் முயற்சிக்கு பின்னரே என் மீது நம்பிக்கை ஏற்பட்டு தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் தயக்கம் உள்ளது.

மாணவர்கள் ஆரம்பக்கல்வியை முடிக்கவே பெரும் சவாலாக உள்ள நிலையில், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கு கூடலூர் செல்ல வேண்டிய நிலை. போக்குவரத்து உட்பட பல்வேறு சிரமங்கள் இருப்பதால், மாணவர்கள் கல்வியை தொடராமல் இருக்கின்றனர்.

இதை போக்க அரசு துறைகள், தன்னார்வலர்களுடன் இணைந்து பழங்குடியின மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, போக்குவரத்துக்கு முடிந்த ஏற்பாடு செய்து வருகிறோம். இதனால், பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலை போதுமானவரை குறைத்து வருகிறோம். இடைநிற்றல் இல்லை என்ற நிலையை எட்ட முயன்று வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x