Published : 27 Jul 2023 05:10 AM
Last Updated : 27 Jul 2023 05:10 AM

ராம்ராஜ் காட்டன் வழங்கும் இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2022 விருது: நாளை காலை சென்னையில் விழா நடைபெறுகிறது

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்ராஜ் காட்டன் வழங்கும் இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2022 விருது நிகழ்வு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

லட்சுமி செராமிக்ஸ், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகியன இந்த விருதுகளை இணைந்து வழங்குகின்றன. வர்த்தமானன் பதிப்பகம், அன்னை வேளாங்கண்ணி கல்வி குழுமம், பொன்வண்டு டிடர்ஜெண்ட் நிறுவனம் ஆகியன நிகழ்வின் பங்குதாரராக இணைந்துள்ளன. ரேடியோ பார்ட்னராக ரேடியோ சிட்டி பங்கேற்க, விழாவுக்கான அரங்கத்தை ரஷ்ய கலாச்சார மையம் வழங்குகிறது.

மாணவர்களின் திறன் வளர்த்தல்: மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு, மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளை போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ‘அன்பாசிரியர்’ விருதுகள் வழங்கப்பட்டன.

‘முன்மாதிரி ஆசிரியர்’ விருது: மூன்றாம் ஆண்டாக ‘அன்பாசிரியர் 2022’ விருதுகள் சென்னையிலுள்ள ரஷ்ய கலாச்சார மைய அரங்கில் நாளை (ஜூலை 28-ம் தேதி வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு வழங்கப்படவுள்ளன.

இவ்விருதுக்கு தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 600-க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அதில் 350 ஆசிரியர்கள் முதல்கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு இறுதிச்சுற்று தேர்வு நடத்தப்பட்டு, மூத்த கல்வியாளர்கள் அடங்கிய தேர்வுக் குழு மூலம் 35 ஆசிரியர்கள் ‘அன்பாசிரியர் 2022’ விருது பெறவும், 6 ஆசிரியர்கள் ‘முன்மாதிரி ஆசிரியர்’ விருது பெறவும் தேர்வாகினர்.

தேர்வு செய்யப்பட்ட 41 ஆசிரியர்களுக்கு நாளை (ஜூலை 28-ம் தேதி வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். இவ்விழாவில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x