Published : 13 Jul 2023 05:50 AM
Last Updated : 13 Jul 2023 05:50 AM

பொறியியல் பட்டதாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: சாஸ்த்ரா - பஜாஜ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம், பஜாஜ் ஆட்டோ நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் திறன் பிரிவு தலைவர் வி. ரமேஷ். உடன், பல்கலைக்கழக முதன்மையர் எஸ். சுவாமிநாதன், பஜாஜ் ஆட்டோ கோட்ட மேலாளர் விஜய் வாவேரே, சமூகப் பொறுப்புணர்வு திட்டத் துணைத் தலைவர் ஜி. சுதாகர், மேலாளர் சினேகா கோன்ஜ்.

தஞ்சாவூர்: ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் அளவுக்கு பொறியியல் பட்டதாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும், பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

இதுதொடர்பாக பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்பிரமணியம், பஜாஜ் ஆட்டோ நிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் திறன் பிரிவு தலைவர் வி.ரமேஷ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர், பஜாஜ் ஆட்டோ சமூகப் பொறுப்புணர்வு திட்டத் துணைத் தலைவர் ஜி.சுதாகர் பேசியது: உற்பத்தி துறையில் 2026-ம் ஆண்டுக்குள் 33 லட்சம் திறன் மிக்கபணியாளர்கள் தேவைப்படுவார்கள் என ஆட்டோமேட்டிவ் திறன் மேம்பாட்டுக் குழுமம் கணித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி மையம் அமைக்க பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் 3-வது திறன் பயிற்சி மையம் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ரூ.30 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்தில் 160 வகையான அதிநவீன பயிற்சி சாதனங்கள் நிறுவப்பட உள்ளன. இம்மையத்தில் மெக்கடிரானிக்ஸ், சென்சார்ஸ் மற்றும் கன்ட்ரோல், ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், இன்டஸ்ட்ரீஸ் 4.0 மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகிய 4 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம் பேசியது: இந்தப் பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 480 பேருக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு பிற கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும் சேர்க்கப்படுவர் என்றார்.

பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ்.சுவாமிநாதன் பேசியது: இந்த மையத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் பயிற்சி பெறலாம். இந்த மையத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சேர்க்கை தொடங்கும் என்றார்.

பஜாஜ் ஆட்டோ நிறுவன மதிப்பீட்டு பிரிவு மேலாளர் சினேகா கோன்ஜ், கோட்ட மேலாளர் விஜய் வாவேரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x