Published : 27 Jun 2023 02:43 PM
Last Updated : 27 Jun 2023 02:43 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தால் தடைபடும் சிறார் கல்வி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் குறையவில்லை என்று புகார் எழுந்துள்ளது. குழந்தை திருமணங்களில் மாநில அளவில் இம்மாவட்டம் 4-வது இடத்தில் உள்ளது. இதையடுத்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளில் 101 ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு குழந்தை திருமணம் கூட நடைபெறவில்லை. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் போதிய விழிப்புணர்வு பெற்றுள்ளனர். குழந்தைகள் நல அமைப்புகள் விழிப்புணர்வால் குழந்தை திருமணங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன. 150 கிராம ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ஒன்று முதல் இரண்டு குழந்தை திருமணங்களே நடந்துள்ளன.

மீதமுள்ள கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களில் குழந்தை திருமணம் அதிகம் நடக்கிறது. இதுகுறித்து புகார்கள் வந்தவுடன் அதை தடுத்து நிறுத்த குழந்தைகள் நல அலுவலர், சமூகநலத் துறையினர், தன்னார்வ அமைப்புகள் ஆகியவை போலீஸாருடன் இணைந்து செயல்பட்டு தடுக்கின்றனர்.

தேசிய குடும்ப நல சுகாதார அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று, அதில் இளம்பெண்கள் குடும்பம் நடத்துவது பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் 12.8 சதவீத இளம்பெண்கள், திருமண வயதை அடையாமல் திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது. அதாவது 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் தான் அதிக அளவில் 23.7 சதவீத இளம்பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துள்ளனர்.

அதற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் கிருஷ்ணகிரி , 3-ம் இடத்தில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நான்காம் இடத்தில் (20.5%) உள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார் கூறியதாவது:

மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளுக்கு சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதனால் குழந்தை திருமணங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x