Last Updated : 16 Jun, 2023 03:39 AM

 

Published : 16 Jun 2023 03:39 AM
Last Updated : 16 Jun 2023 03:39 AM

நெல்லை சுந்தரனார் பல்கலை.யில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை படிப்பு அறிமுகம்

திருநெல்வேலி: இந்தியாவில் முதல்முறையாக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை படிப்பு இந்த கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ந. சந்திரசேகர் தெரிவித்தார்.

இப்பல்கலைக்கழகத்தில் 54-வது கல்விசார் நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த கல்விசார் நிலைக்குழுவை சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தை தொடங்கி வைத்து துணைவேந்தர் பேசினார். பதிவாளர் ஜே. சாக்ரட்டீஸ் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் மேற்கொள்ள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் புதிய துறைகள், பாடத்திட்டங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைவேந்தர் கூறியதாவது:

பல்கலைக்கழகத்தின்கீழ் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் செயல்படும் கடல்சார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் தனியார் துறை பங்களிப்புடன் ரூ.600 கோடியில் சுந்தரனார் பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக ரூ.40 லட்சம் முதலீட்டில் கட்டுமான பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த பூங்காவில் 50 பொருட்களை விஞ்ஞானிகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை அறிவியல் பாடப் பிரிவில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அன்ட் மெஷின் லாங்குவேஜ், சைபர் செக்யூரிட்டி மற்றும் டேட்டா சயின்ஸ் ஆகிய புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளது. இதுபோல் முதுகலை பட்டப்படிப்பில் இந்தியாவில் முதல்முறையாக அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய தொல்லியல் துறை படிப்பும், அப்லைடு பிசிக்ஸ் படிப்பும் தொடங்கப்படுகிறது. பல்வேறு பல்கலைக்கழகங்களில் தொல்லியல்துறையில் பல்வேறு பிரிவுகளில் படிப்புகள் உள்ளன. ஆனால் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை பட்டப்படிப்பு இந்தியாவில் முதல்முறையாக சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னிகுமரி, தென்காசி மாவட்டங்களில் தொல்லியல் களங்கள் அதிகமுள்ளன. இங்கெல்லாம் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற இடங்களில் நடைபெறும் அகழாய்வு மூலம் தொன்மை நாகரிகம் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. இதனால் முதுகலை தொல்லியல்துறை பட்டம் பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும் என்பதால் இந்த பாடப்பிரிவை தொடங்குகியுள்ளோம். தொல்லியல் ஆய்வுகள் மூலம் குமரி கண்டம், லெமுரியா கண்டம் குறித்த வரலாறுளின் உண்மைகள் புலப்படும். முதற்கட்டமாக இத்துறையில் நிபுணத்துவம் மிக்க பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை சேர்ந்த வருகைதரு பேராசிரியர்கள் மூலம் பாடங்கள் நடத்தப்படும்.

வெறும் அகழ்வாராய்ச்சி மட்டுமல்லாது புவியியல் அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைந்து தொல்லியல் படிப்புகளை மேற்கொள்ள ஏதுவாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையில் பணிவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு வழிவகை செய்யும் வகையில் இத்தாலி பல்கலைக்கழகத்துடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. தென்மாவட்டங்களில் காற்றாலை மின்உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு இயற்கை சார்ந்த மின்னுற்பத்திக்கு வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டு அப்ளைட் பிசிக்ஸ் முதுகலை பாடப்பிரிவை தொடங்கியுள்ளோம்.

பல்கலைக்கழகத்தில் 2021-2022-ம் கல்வியாண்டுக்கான பட்டமளிப்பு விழா மட்டுமே நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்த பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெறும். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பாளையங்கோட்டை சாந்திநகரிலுள்ள பல்கலைக்கழக நகர வளாகத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பெயரை சூட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x