Last Updated : 14 Jun, 2023 03:59 PM

 

Published : 14 Jun 2023 03:59 PM
Last Updated : 14 Jun 2023 03:59 PM

சிவதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரமைக்கப்படாத மைதானம்: மாணவர்கள் தவிப்பு

சேலத்தை அடுத்த சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் உள்ளது. படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்: சேலத்தை அடுத்த சிவதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் மைதானம் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், மாணவ, மாணவிகள் தினசரி விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகர எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிவதாபுரத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சிவதாபுரம் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். பள்ளியின் மையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமான மைதானம் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, பள்ளியின் விளையாட்டு மைதானம், மாணவ, மாணவிகள் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையில் சீராக இருந்தது. அதன் பின்னர் மழைக்காலத்தில் மழை நீர் தேங்கக் கூடிய பள்ளமான இடமாக மாறிப்போனது. இதனால், மழைக் காலத்தில் மைதானத்தை மாணவ, மாணவிகள் பயன்படுத்த முடியாமல் இருந்தது.

எனவே, மைதானத்தை சற்று மேடாக்கி, மழை நீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகளின் பெற்றோரும், ஊர் பொது மக்களும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, பள்ளி மைதானத்தை மேடாக்குவதற்காக, சில மாதங்களுக்கு முன்னர் கிராவல் மண் கொட்டப்பட்டு வந்தது. அதன் பின்னர் அந்தப் பணி நின்று போனது.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிவுற்று, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சிவதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால், மைதானத்தை சீரமைக்கும் பணி நின்றுவிட்டதால், மாலை நேரத்தில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் மாணவ, மாணவிகள் தவிப்படைந்துள்ளனர்.

இது குறித்து மாணவ, மாணவிகளின் பெற்றோர் கூறியது: சிவதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, போக்குவரத்து வசதியுள்ள இடத்தில் அமைந்துள்ளதால், சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து ஏழை மாணவ, மாணவிகள் இங்கு வருகின்றனர். பள்ளியில் போதுமான வகுப்பறைகள், ஹைடெக் லேப், குடிநீர் வசதி போன்றவை உள்ளன. ஆனால், பள்ளியின் மைதானம் சீரமைக்கப்படாமல் இருப்பதால், மாலை நேரத்தில் மாணவ, மாணவிகள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

பள்ளியின் சுற்றுப் பகுதியில் உள்ள வீதிகள், சாலைகள் மேடாக்கப்பட்டதால், பள்ளி வளாகம் தாழ்வான இடமாக மாறிப்போனது. இதன் காரணமாக, மழைக்காலத்தில் பள்ளி மைதானம் மழை நீர் தேங்கும் இடமாக மாறிப்போனது. எனவே, மாணவ, மாணவிகள் நலன்கருதி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தொகுதி எம்எல்ஏ., மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பள்ளியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக, பள்ளி மைதானத்தை மேடாக்கிட, ஏராளமான லாரிகளில் கிராவல் மண் கொண்டு வரப்பட்டு, மைதானத்தில் கொட்டப்பட்டு வந்தது. ஆனால், மைதானம் பெரிய அளவில் இருப்பதால், கிராவல் மண் தேவை கூடுதலாக இருந்தது. இந்நிலையில், மைதானம் சீரமைப்புப் பணி தொய்வடைந்து, கிடப்பில் போடப்பட்டது. கோடை விடுமுறை காரணமாக, பள்ளி மூடப்பட்டிருந்ததால், மைதானம் சீரமைப்புப் பணி குறித்து பேச்சு எழவில்லை.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டதால், மாணவ, மாணவிகள் தினமும் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மைதானத்தில் கொட்டப்பட்ட கிராவல் மண், சீராக நிரவப்படாமல் உள்ளது. மேலும், மைதானத்தை முழுமையாக மேடாக்க, கூடுதலாக கிராவல் மண் கொட்டப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

மைதானம் ஆங்காங்கே பள்ளமும் மேடுமாக இருப்பதால், அதில், மாணவ, மாணவிகள் ஓடி விளையாடினால் கீழே விழுந்து அடிபட்டு காயம், எலும்பு முறிவு உள்ளிட்டவை ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனிடையே, பள்ளியின் ஒரு பக்கத்துக்கான சுற்றுச் சுவர் இடிந்து கிடப்பதால், பள்ளி வளாகத்துக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து குப்பை போடுவது, இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, ஆசிரியர்களுக்கான ஓரிரு கழிப்பறையையே மாணவர்களும் பயன்படுத்த வேண்டியிருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சிவதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் மைதானம், சுற்றுச்சுவர், கழிப்பறை ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி தர மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x