Published : 10 Jun 2023 06:30 AM
Last Updated : 10 Jun 2023 06:30 AM

பங்களிப்புத் தொகை செலுத்தியும் தரம் உயர்த்தப்படாத ஈரோடு மலைக்கிராம அரசு பள்ளிகள்

ஆசனூர் ஊராட்சியில் செயல்படும் கோட்டாடை அரசு நடுநிலைப்பள்ளி.

ஈரோடு: ஈரோடு மாவட்ட மலைக்கிராம பள்ளிகளை தரம் உயர்த்தத் தேவையான பங்களிப்புத் தொகையைச் செலுத்தியும், அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி மலைப்பகுதியில், ஆசனூர் ஊராட்சியில் கோட்டாடை மலைக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி குழியாடா, ஒசட்டி, உப்பட்டி, புதுக்காடு, சோக்கிதொட்டி, கல்கூசி, பீமரதொட்டி தேவர்நத்தம், அட்டப்பாடி, சீகட்டி, கீள்மாவள்ளம், மேல்மாவள்ளம் என பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் அமைந்துள்ளன.

கடந்த 1961–ல் கோட்டாடையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்ட நிலையில், 1996-ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 103 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கோட்டாடை கிராமத்துக்கு அருகில், தேவர்நத்தம் கிராமத்தில் ஒரு தொடக்கப்பள்ளியும், மாவள்ளத்தில் ஒரு தொடக்கப்பள்ளியும் அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதி இல்லை: கோட்டாடை நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு நிறைவு செய்தவர்கள், 9-ம் வகுப்புக்கு செல்வதாயின் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஆசனூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிக்குத்தான் செல்லவேண்டும். இப்பகுதிக்கு போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது.

குறிப்பாக, கோட்டாடை பகுதியிலிருந்து, ஆசனூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிக்கு 60 மாணவ, மாணவியர் தினமும் பேருந்தில் செல்கின்றனர். பள்ளி நேரத்துக்கு பேருந்து இல்லாததால், காலை 6 மணிக்கு புறப்படும் பேருந்தில், காலை உணவையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, பள்ளிக்கு பயணிக்கும் இவர்கள், மாலை 6 மணிக்குத்தான் வீடு திரும்ப முடிகிறது.

இத்தகைய சிரமங்களால், பல மாணவ, மாணவியர் 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி வருகின்றனர். குழந்தைத் திருமணங்கள் நடக்கவும் இப்பிரச்சினை அடிப்படை காரணமாக உள்ளது.

ரூ.1 லட்சம் பங்குத்தொகை: இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த, கிராம மக்கள் தொடர் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு பொதுமக்களின் பங்களிப்புத்தொகையாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்தது. இதன்படி, கிராமமக்கள் இத்தொகையை திரட்டி அரசுக்கு செலுத்தி, 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் பள்ளி தரம் உயர்த்தப்படுவது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

காத்திருக்கும் பள்ளிகள்: இதேபோல, சத்தியமங்கலம் ஒன்றியத்தில் பவளக்குட்டை மற்றும் கரளயம் நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்தவும், பொதுமக்கள் தலா ரூ.1 லட்சம் செலுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை பள்ளிகள் தரம் உயர்த்துதல் தொடர்பான அறிவிப்பு வெளிவரவில்லை.

அந்தியூரை அடுத்த பர்கூர் பகுதியில் உள்ள கொங்காடை உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும், சோளகனை, கத்திரிமலை, குட்டையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்த திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டு, பல ஆண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஈரோடு மாவட்ட மலைக்கிராம மக்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளிகளை தரம் உயர்த்துதல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அரசுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்ப வேண்டுமென, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x