

யூடியூபர் முக்தார் அகமது
சென்னை: பாஜக பெண் நிர்வாகி குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்த புகாரின்பேரில் யூடியூபர் முக்தார் அகமது கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
பாஜக மாநில விளையாட்டு, திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருப்பர் அலிஷா அப்துல்லா. இவர் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்புபடுத்தி யூடியூபர் முக்தார் அகமது, பாஜக முன்னாள் பிரமுகர் திருச்சி சூர்யா ஆகியோர் இழிவான கருத்துகளுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, காவல் ஆணையரின் உத்தரவின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அலிஷா அப்துல்லா புகாரில் தெரிவித்திருந்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தாரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தலைமறைவு: திருச்சியில் சூர்யாவை (33) தனிப்படையினர் கடந்த 4-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான யூடியூபரான வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த முக்தார் அகமதுவை (48) தேடி வந்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மண்டியாவில் முக்தார் அகமதுவை தனிப்படையினர் நேற்று முன்தினம் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இவர் மீது ஏற்கெனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருவது தொடர்பாக இவர் மீது 20-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காவல் ஆணையர் எச்சரிக்கை: சமூக ஊடகங்கள், இணையதளங்களில் பெண்களை அவமதிக்கும் வகையில் ஆபாசமான, இழிவான, சட்டவிரோத கருத்துகளை வெளியிடுவது கடுமையான குற்றம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.