

சென்னை: கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த மாணவியை அவர் கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாக உறவு கொண்டதாக மாணவி அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ. 7.50 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.