

தீபக் மீனா
ஆவடி: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் பொது மேலாளர் சவுந்தர்ராஜனுக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனுப்புவது போன்று வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.1.90 கோடி பணத்தை செலுத்துமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை நம்பிய சவுந்தர்ராஜன், குறுஞ்செய்தியில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.1.90 கோடியை அனுப்பினார். அதன்பிறகே குறுஞ்செய்தி போலி என்பதையும், தான் ஏமாற்றப்பட்டதையும் அறிந்தார்.
இதுகுறித்து சவுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில் ஆவடி, இணைய வழிக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் புதுடெல்லியைச் சேர்ந்த தீபக் மீனா (27) மோசடி செய்யப்பட்ட ரூ.1.90 கோடியை தன் வங்கிக் கணக்கில் பெற்று, அதை பல்வேறு வங்கிகளில் மாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து வங்கிக் கணக்கு விவரங்களின் அடிப்படையில் ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் புதுடெல்லி சென்று தீபக் மீனாவைக் கைது செய்து, பொதுமக்களை ஏமாற்றப் பயன்படுத்திய செல்போன்களை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து தீபக் மீனாவை நேற்று முன்தினம் போலீஸார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.