குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் விபத்து: டாரஸ் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் விபத்து: டாரஸ் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு
Updated on
1 min read

சென்னை: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் டாரஸ் லாரியில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு இளம்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தாம்பரத்திலிருந்து வேளச்சேரி நோக்கி டாரஸ் லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. குரோம்பேட்டை ரேடியல் சாலை மேம்பாலம் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள் பிரதான சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் டாரஸ் லாரியின் அருகே சென்ற நிலையில், லாரியில் சிக்கி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ஒருவர் லாரியில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற மற்றொரு பெண் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

விபத்து குறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு தாம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், “உயிரிழந்தவர் திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடி அருகே கீழ் உத்தரங்குடியைச் சேர்ந்த ஜமுனா (23) என்பது தெரியவந்தது. அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மயிலாடுதுறை மாவட்டம் வரதம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா (22) என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்தபோது லாரி மற்றும் இருசக்கர வாகனம் எந்த நிலையில் பயணித்தன, சாலையை கடக்க முயன்றபோது ஏற்பட்ட சூழ்நிலை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், விபத்து நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். விபத்துக்கான முழுமையான காரணம் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட கோர விபத்து, இரவு நேரத்தில் சாலை கடக்கும் போது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் விபத்து: டாரஸ் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு
தந்தையை ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு பைக்கில் பின்தொடர்ந்த மகன் விபத்தில் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in