

திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகி திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் பிரகாசம் என்கிற குட்டி. இவரை நேற்று முன் தினம் பூந்தமல்லி (தனி) தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில், பிரகாசம் தனக்கு பாலியல் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகி நேற்று திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியாக நான் இருந்து வருகிறேன்.
இந்நிலையில், கடந்த ஜூன் 8-ம் தேதி திருவள்ளூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த எங்கள் கட்சி நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார்.
அந்நிகழ்வில் நானும் பங்கேற்றேன். அப்போது, விழா மேடையில், எங்கள் கட்சியின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது, பிரகாசம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து, தட்டிக்கேட்ட என் கணவருக்கும், எனக்கும் பிரகாசம் கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக எங்கள் கட்சியின் தலைமையிடம் புகார் அளித்துள்ளேன்.
ஆனால், அவர் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, பிரகாசம் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இப்புகாரை மறுத்து, பிரகாசத்தின் மனைவி சுகுணா, மகளிர் அணி நிர்வாகிகள் திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட மகளிர் அணியின் முக்கிய நிர்வாகி பதவியை வாங்கி தரக் கோரி, மகளிர் அணி நிர்வாகி பிரகாசத்திடம் பிரச்சினை செய்து வந்தார்.
அப்பதவியை வாங்கி தராததால் பிரகாசம் மீது அவர் பொய்யான புகார் தெரிவித்துள்ளார். கட்சியில் உள்ள ஒரு சிலரே பிரகாசத்துக்கு எதிராக அந்த பெண் நிர்வாகியை தூண்டி விட்டுள்ளனர். ஆகவே, பொய்யான புகார் கொடுத்த பெண் நிர்வாகி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.