

திருவள்ளூர்: திமுகவுக்கு தடை இல்லை. எங்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதில்லை என தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தவெக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தவெக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்கள் தங்களுக்கு திட்டமிட்டு பிரச்சார அனுமதி மறுக்கப்படுவதாக திருவள்ளூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து தவெக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர், பூந்தமல்லி தொகுதி வேட்பாளர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த அனுமதி கோரி 2 நாட்களுக்கு முன் அனுமதி கோரினோம்.
ஆனால் போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் சுவிதா செயலியிலும் விண்ணப்பித்தோம். ஆனால் பதில் ஏதும் இல்லை.
50 நபர் மட்டுமே கூடுவார்கள் என்று கூறி அனுமதி கோரினாலும் போக்குவரத்து நெரிசல் பாதுகாப்பு காரணங்களை கூறி அனுமதி மறுக்கின்றனர்.
திமுக வேட்பாளர் கடந்த 2 நாட்களாக கட்சி கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.