

மதுரை: தனியார் நிறுவன ஆண்டுவிழாவையொட்டி கார் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி இணைய வழியில் உசிலம்பட்டி பெண்ணிடம் ரூ.3.30 லட்சம் பெற்று மோசடி செய்தது தொடர்பாக மதுரை சைபர் க்ரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவர் இணைய வழியில் பொருட்கள் வாங்கும் நிறுவனம் ஒன்றில் கணக்கு வைத்து அடிக்கடி பொருட்கள் வாங்கினார். கடந்த 4-ம் தேதி அவரது செல்போன் வாட்ஸ்- அப்புக்கு தகவல் வந்தது. அதில், அவர் கணக்கு வைத்திருந்த தனியார் நிறுவனத்தின் 8-வது ஆண்டு விழாவையொட்டி முதல் பரிசாக கார் கிடைத்துள்ளது என தெரிவித்திருந்தனர்.
இதை நம்பி அந்தப் பெண் சம்பந்தப்பட்ட எண்ணைத் தொடர்பு கொண்டபோது காரை பரிசாகப் பெறுவதற்கு முன்பதிவுக் கட்டணம், ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என அதில் பேசிய நபர் கூறி உள்ளார்.
இதைத் தொடர்ந்து பேசிய நபர் கூறியபடி உசிலம்பட்டி பெண் தனது வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு தவணையில் ரூ.3.30 லட்சம் அனுப்பி உள்ளார். நீண்ட நாள் காத்திருந்தும் அவருக்கு கார் பரிசு கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், மதுரை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.