

சென்னை: அண்ணன் மகளை கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு 25 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, திருவண்ணாமலையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 14 வயது மகள், சென்னையில் சித்தப்பா, சித்தியின் பராமரிப்பில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சித்தப்பா கோயம்பேடு மார்க்கெட்டில் லோடுமேனாக இருந்தார். சித்தி பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 2023 ஜூலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது, சித்தப்பா அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
இதுதொடர்பாக சித்தி அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு மகளிர் காவல் ஆய்வாளர் உமாதேவி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். சிறுமியின் வாக்குமூலம் மற்றும் சித்தப்பாவிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில் குற்றம் நிரூபணமானது.
அவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பத்மா முன்பு வழக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி, சிறுமிக்கு பிறந்த குழந்தை, குழந்தைகள் நலக்குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, குற்றவாளியான சித்தப்பாவுக்கு 25 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ரூ.3 லட்சத்தை சிறுமிக்கு அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.
சிறுமி 10-ம் வகுப்பு தேர்வை மீண்டும் எழுதவும், மொத்த தொகை ரூ.8 லட்சத்தை சிறுமியின் பெயரில் 5 ஆண்டுகளுக்கு வங்கியில் டெபாசிட் செய்யவும், சிறுமியின் பாதுகாப்பு நபராக தொண்டு நிறுவன நிர்வாகியை நியமித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.