

கோப்புப் படம்
சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவலாளியின் செல்போனை திருடி ஜிபே மூலம் ரூ.2 லட்சம் எடுத்து மோசடி செய்த பெண் தூய்மைப் பணியாளர்கள் இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்கேன் சென்டரில் காவலாளியாக வேலை செய்து வருபவர் நாகலிங்கம் (58). கடந்த 25-ம் தேதி வழக்கம்போல் பணியில் இருந்தார்.
அப்போது அவரது செல்போன் திருடுபோனது. பின்னர் 2 நாட்களில் அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.2 லட்சம் மாயமானது. ஜிபே மூலம் பணம் எடுக்கப்பட்டதை அறிந்த நாகலிங்கம் இது தொடர்பாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில் செல்போனை திருடி, ஜிபே மூலம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டது சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த ரேவதி (39), திருவொற்றியூரைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (38), வானகரத்தைச் சேர்ந்த தினேஷ் (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரேவதி, உமா மகேஸ்வரி இருவரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஏற்கெனவே நாகலிங்கத்தின் ஜிபே பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு, அவரது செல்போனை திருடி பணம் எடுத்து மோசடி செய்துள்ளனர்.
இவர்களுக்கு தினேஷ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.