

வேலன், வீரேந்தர்
திருவள்ளூர்: திமுக இளைஞரணி தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாணியன் சத்திரம் பகுதியில், உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்காக நேற்று முன்தினம் இரவு சாலையில் நிகழ்ச்சிக்கான பேனர் வைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பேனரை தூக்கிக் கட்டும்போது எதிர்பாராத விதமாக உயரத்தில் சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் பேனர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து அதே பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டர்களான வீரேந்தர் (22), காரணி கிராமத்தைச் சேர்ந்த வேலன் (30) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த ஆல்பர்ட் (22) என்பவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வெங்கல் போலீஸார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மின்விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் திமுக தொண்டர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.