

சென்னை: மெரினா லூப் சாலையில் 79 ஆக்கிரமிப்புக் கடைகளை மாநகராட்சி நேற்று அகற்றியது.
மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில், மீன் கடைகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.
அவமதிப்பு வழக்கு
இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில், காவல் துறை உதவியுடன் மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.
பணியில் 160 போலீஸார்
இப்பணிகளுக்காக 2 ஜேசிபி, 4 லாரிகள், 3 பாப்காட் இயந்திரம், 2 டாடா ஏஸ் ஈடுபடுத்தப்பட்டு, 30 உணவகங்கள், 37 மீன் கடைகள், 12 சிறுகடைகள் என மொத்தம் 79 கடைகள் அகற்றப்பட்டன. இப்பணியில் 160 காவல் துறை அலுவலர்கள், 20 போக்குவரத்து காவல் அலுவலர்கள், 50 மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.