

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உடல்களை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே ஆலப்பட்டி கிராமத்தில் உள்ள வெப்பாலம்பட்டி சாலையோரத்தில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் கொலை செய்யப்பட்டு, உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அரை கிலோ மீட்டர் தொலைவில் கொடுகூரில் அதே வயதுடைய மற்றொரு இளைஞர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்தது.
தகவல் அறிந்து வந்த சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி, எஸ்பி தங்கதுரை உள்ளிட்ட போலீஸார் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து உடல்களை கைப்பற்றினர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, கொலையானவர்களின் உடல்கள் 70 முதல் 80 சதவீதம் வரை எரிந்த நிலையில் உள்ளதால், கொலையான இளைஞர்கள் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. வேறு இடத்தில் இவர்களைக் கொலை செய்து வாகனத்தில் உடல்களை எடுத்து வந்து இப்பகுதியில் வைத்து எரித்திருக்கலாம். அண்டை மாநிலம், மாவட்டங்களில் காணாமல் போனவர் விவரங்கள் மற்றும் உடல்கள் மீட்கப்பட்ட சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடக்கிறது” என்றனர்.
மேலும், இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.