மதுரை - திண்டுக்கல் சாலையில் லாரியில் இருந்து இரும்பு ராடு விழுந்து விபத்து: ஜல்லிக்கட்டு வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

மதுரை - திண்டுக்கல் சாலையில் லாரியில் இருந்து இரும்பு ராடு விழுந்து விபத்து: ஜல்லிக்கட்டு வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

மதுரை: சோழவந்தான் அருகே நகரி பகுதியில் மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் இருந்து தவறி விழுந்த இரும்பு ராடு மூலம் ஏற்பட்ட விபத்தால் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் ​சோழவந்தான் அருகிலுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன் (28), அவரது நண்பர் ராகுல் (26). சிறந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களான இவர்கள், பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஒன்றாகப் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு இருவரும் மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, நகரி அருகே சென்றபோது, அவ்வழியாகச் இரும்பு பொருட்களை எற்றிச் சென்ற கனரக லாரி ஒன்று, அவர்கள் சென்ற இருசக்கர வாகத்தை முந்திச் சென்றுள்ளது.

அப்போது, எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து கீழே சரிந்து விழுந்த பெரிய இரும்பு ராடு ஒன்று இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்த கோபாலகிருஷ்ணன், ராகுல் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சோழவந்தான் போலீஸார் இருவரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

நண்பர்களும் ஜல்லிக்கட்டு வீரர்களுமான இருவர் ஒரே நேரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம், சித்தாலங்குடி கிராம மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை - திண்டுக்கல் சாலையில் லாரியில் இருந்து இரும்பு ராடு விழுந்து விபத்து: ஜல்லிக்கட்டு வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு
“3.25 லட்சம் பேர் உயிரிழப்பு; புகைத் தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in