வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 60+ பேரிடம் பண மோசடி - சென்னையில் இருவர் கைது

பாலன் | வேல்முருகன்

பாலன் | வேல்முருகன்

Updated on: 
1 min read

சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 60-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மதுரவாயல், எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் (30) என்பவர், கடந்த ஆண்டு மே மாதம் இன்ஸ்டாகிராமில் வெளியான விளம்பரத்தைப் பார்த்து, வளசரவாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் செயல்பட்டு வந்த ‘கோல்டன் ஸ்கைவெஸ்’ என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, மேற்கு ஐரோப்பிய நாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டு பணி அனுமதி நடைமுறைகளுக்காக ரூ.5 லட்சம் செலவாகும் என்றும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய லட்சுமி நாராயணன், கடந்தாண்டு மார்ச் முதல் பல தவணைகளாக மொத்தம் ரூ.5 லட்சம் செலுத்தியுள்ளார்.

பின்னர், அவருக்கு வேலைவாய்ப்புக் கடிதம் மற்றும் சில ஆவணங்களை அந்த நிறுவனம் அனுப்பியுள்ளது. அவற்றைச் சரிபார்த்தபோது, அவை போலியானவை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறிப்பிட்ட நிறுவனத்துக்குச் சென்று பார்த்தபோது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததுடன், சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களும் அணைக்கப்பட்டிருந்துள்ளன. அவர்கள் தலைமறைவானதும் தெரியவந்தது.

இதுகுறித்து, லட்சுமி நாராயணன் அளித்த புகாரின்பேரில், வளசரவாக்கம் போலீஸார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை எம்ஜிஆர் நகர், அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (48), கேகே நகர், சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த பாலன் (46) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம், ஒரு கார், 3 கணினிகள் மற்றும் அவற்றின் துணை பாகங்கள், ஒரு பிரிண்டர், 2 செல்போன்கள், பணம் எண்ணும் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், வேல்முருகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தது தெரியவந்தது.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 60-க்கும் மேற்பட்டோரிடம் மொத்தம் சுமார் ரூ.75 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், மோசடி மூலம் கிடைத்த பணத்தில் கார் வாங்கியதுடன், கடன்களை அடைத்து, ஆடம்பரச் செலவுகள் செய்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>பாலன் |&nbsp;வேல்முருகன்</p></div>
கோயில் அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in