

சென்னை: பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருப்பவர் அலிஷா அப்துல்லா. இவர் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை, நேற்று முன்தினம் சந்தித்து புகார் மனு அளித்தார்.
அதில், “12 நாட்களுக்கு முன்னர் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்புபடுத்தி யூடியூபர் முக்தார், திருச்சி சூர்யா ஆகியோர் இழிவான கருத்துகளுடன் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார், வழக்குப் பதிந்து உடனடி விசாரணையில் இறங்கினர். இதில் அலிஷா அப்துல்லா புகாரில் தெரிவித்திருந்தது உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் ஆகியோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக தனிப்படை போலீஸார் திருச்சி சென்று, திருச்சி சூர்யாவை (33) நேற்று அதிகாலை கைது செய்துனர்.
விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்படுவார் என போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய யூடியூபர் முக்தார் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். சமூக ஊடகங்கள், இணையதளங்களில் பெண்களை அவமதிக்கும் வகையில் ஆபாசமான, இழிவான கருத்துகளை வெளியிடுவது கடுமையான குற்றம்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.