

சென்னை: நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜிஎஸ்டி ஆய்வாளரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக திருநங்கை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோயம்பேட்டில் வசித்து வருபவர் சுக்லா பாலாஜி (26). ஜிஎஸ்டி ஆய்வாளராக பணியாற்றி வரும் இவர், நேற்று காலை நெசப்பாக்கம் சந்திப்பு அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு திருநங்கைகள், சுக்லா பாலாஜியை மிரட்டியும் தாக்கியும், அவர் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து சுக்லா பாலாஜி சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடம் மற்றும் அதை சுற்றுப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில், ஜிஎஸ்டி ஆய்வாளரை தாக்கி, வழிப்பறியில் ஈடுபட்டது கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த திருநங்கையான அன்சிகா என்ற கீர்த்தனா (19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அன்சிகா என்ற கீர்த்தனாவை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, வழிப்பறிக்கு உடந்தையாக இருந்து தலைமறைவாகியுள்ள அவரது தோழி மற்றொரு திருநங்கையை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.