

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
திருவாரூர்: சொந்த நாட்டையும், பெற்ற தாயையும் யாரும் அவமானப்படுத்த மாட்டார்கள் என்பதைப் போல தமிழ்த்தாய் வாழ்த்தையும் மூன்றாவதாக பாடுவதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமை வகித்தார், துணைவேந்தர் சுலோச்சனா சேகர் வரவேற்றார், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸவநாத் அர்லேக்கர், நாகை எம்.பி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தங்கப் பதக்கம் வென்ற 50 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி பாராட்டினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,053 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
பின்னர் விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “பல்துறை கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் விழுமிய அடிப்படையிலான கற்றலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் இந்த நோக்கத்தைச் சிறப்பாக முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது.
பெண்களின் உயர்கல்விச் சேர்க்கை 2014-15-ம் ஆண்டில் 1.57 கோடியிலிருந்து 2023-24-ம் ஆண்டில் 2.24 கோடியாக, அதாவது 42.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
நான் செல்லும் பல்வேறு பட்டமளிப்பு விழாக்களில் ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் பெண்கள் பட்டங்களை பெறுகின்றனர். இது வரவேற்கக் கூடிய ஒன்று. பட்டம் பெறும் மாணவர்கள், வகுப்பறைகளை விட்டு வெளியேறினாலும், கற்றலை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. இன்று பெறும் பட்டம், வாழ்நாள் முழுவதும் தொடரும் அறிவுத் தேடலின் தொடக்கம் மட்டுமே. எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.
பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், சுதந்திரத்தின் நூற்றாண்டை ஒட்டி வளர்ச்சியடைந்த, அனைவரையும் உள்ளடக்கிய, புதுமையான மற்றும் நிலையான நாட்டை உருவாக்கும் “Viksit Bharat @2047” என்ற இலக்கை நாடு முன்னெடுத்து வருகிறது. அதனை நிறைவேற்றுவதில் இளைஞர்களின் ஆற்றல், கற்பனைத் திறன் மற்றும் தலைமைத்துவம் முக்கியமானவை.
ஒவ்வொரு செயலிலும் தேசமே முதன்மை என்ற எண்ணத்தை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தேர்வு முறையில் முறைகேடுகளைத் தடுப்பதும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியம்.
நான் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோது, இதே நோக்கத்தைக் கொண்ட சட்டத்தை அம்மாநில அரசு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்துக்கு உடனடியாக கையெழுத்திட்டு அது சட்டமாக வழிவகுத்தேன் பொதுத்தேர்வு முறையின் நேர்மையையும், வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்வதில் இதுபோன்ற சீர்திருத்தங்கள் முக்கியமானவை.
இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த காவல் துறை இது தொடர்பான குற்றவாளிகள் மீது எந்த ஒரு கருணையும் காட்டக் கூடாது. இளைஞர்கள் ஒவ்வொருவரும் போதைப் பொருட்களை தவிர்ப்பது மட்டுமல்லாது, உங்கள் நண்பர்களும் போதைப் பொருளிலிருந்து விலகி இருக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
இப்போதெல்லாம் எந்த ஒரு செயலையும் அரசியல் மையப்படுத்தி வருகின்றனர். அண்மையில், தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர்கள் 2 பேர், இருந்த அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாக பாடப்பட வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதால், அதனை அவமானப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சொந்த நாட்டையும், பெற்ற தாயையும் யாரும் அவமானப்படுத்த மாட்டார்கள் என்பதைப் போல தமிழ்த்தாய் வாழ்த்தையும் மூன்றாவதாக பாடுவதை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.