

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே நீரில் மூழ்கி சகோதரிகள் உள்ளிட்ட 3 சிறுமிகள் உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் ஆரூர் கிராமம் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அசோகன் (36). தொழிலாளி.
இவரது மூத்த மகள் யுவ (13), இளைய மகள் பிரியங்கா (12). அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் யுவ 8-ம் வகுப்பும், பிரியங்கா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
யுவயின் தோழியான அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் பிரியா(13), அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், யுவ, பிரியங்கா, பிரியா ஆகியோர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது, கிணற்றில் இறங்கிய 3 சிறுமிகளும் அடுத்தடுத்து நீரில் தவறிவிழுந்து மூழ்கினர். அவர்களது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், சிறுமிகளை மீட்க முடியவில்லை. தகவலறிந்து வந்த கலவை போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி, நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுமிகளின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கலவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்திஉள்ளது.