

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் | கோப்புப் படம்
மதுரை: “திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற தீர்ப்பு கூறிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு சமூக வலைதளத்தில் மிரட்டல் பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியினர் இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சத்ய சுபாஷ், மாநில பொருளாளர் ஞானசேகரன், வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் கொடுத்த புகார் மனுவில், ‘கடந்த வாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பில் மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறக்கப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் நீதிபதி சுவாமிநாதனை ஆபசமான வார்த்தையால் திட்டி, அவரது புகைப்படத்தை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் சித்திரித்து நீதித் துறையை களங்கப்படுத்தும் விதமாகவும், நீதிபதியை தீ வைத்து கொளுத்தி விடுவோம் என ராம் சேகுவாரா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள முகவரியை பார்த்தால் அவர் (ராம் சேகுவாரா) பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுதல், தீவிரவாதத்தை தூண்டும் நபராகவும் இருந்து வருகிறார். ராம் சேகுவாரா என்ற முகநூல் பக்கத்திலுள்ள பதிவு, பொது அமைதியை கெடுக்கும் வகையில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
தீவிரவாதத்தை தூண்டுதல், மதக் கலவரத்தை ஏற்படுத்துதல், நீதித் துறையை மிரட்டும் விதமாகவும் நீதிபதி மீது கொலை வெறி வன்மத்தை காட்டிய ராம் சேகுவாரா என்ற முகநூல் பக்கத்தை பயன்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் கூறியுள்ளார்.