

திருச்சி சமயபுரம் நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
திருச்சி: ‘‘திருப்பரங்குன்றம் பிரச்சினை இந்துக்களுக்கு சாதகமாகத் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு என்ன தேவையோ, அதை நாங்கள் செய்வோம்’’ என்று ஆர்எஸ்எஸ் சர்சங்கசாலக் மோகன் பாகவத் தெரிவித்தார்.
திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கல்வியாளர்கள், பிரபலங்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோரை ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பாகவத் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகியும், பாஜக மூத்த தலைவருமான ஹெச்.ராஜா, “திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள இந்துக்களில் சில பிரிவினர், இந்த விவகாரத்தை ஆர்எஸ்எஸ் தேசிய அளவில் எடுத்துச் சென்று வழிகாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.” என்று குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த மோகன் பாகவத், “திருப்பரங்குன்றம் பிரச்சினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தால் அது செய்யப்படும். ஆனால், அதற்குத் தேவைப்படும் என்று நான் நினைக்கவில்லை. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அது அங்கேயே தீர்க்கப்படட்டும்.
தமிழகத்தில் இந்துக்களின் எழுச்சி, விரும்பிய விளைவைக் கொண்டு வரப் போதுமானது என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை தேவைப்பட்டால், தமிழகத்திலும் இந்து அமைப்புகள் செயல்படுகின்றன. அவர்கள் எங்களுக்குத் தெரிவிப்பார்கள். அப்போது நாங்கள் அதைப் பற்றி சிந்திப்போம். ஆனால் தற்போதைக்கு, இந்தப் பிரச்சினை இங்கேயே தீர்க்கப்பட முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்த விவகாரத்தின் முடிவு சமரசம் செய்துகொள்ள முடியாதது. நாங்கள் இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லத் தேவையில்லை.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி. அந்தப் பிரச்சினை இந்துக்களுக்குச் சாதகமாகத் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு என்ன தேவையோ, அதை நாங்கள் செய்வோம். திருப்பரங்குன்றம் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழகத்தில் இந்துக்களின் எழுச்சியே போதுமானது. தற்போது நீதிமன்றத்தில் உள்ள இந்த விவகாரத்தை தேசிய அளவில் கொண்டு செல்லத் தேவையில்லை.” என தெரிவித்தார்.