

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த விளக்குத்தூண் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது குபேந்திரனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் இடையே வடக்கு மாசி வீதி அருகில் கழிப்பறையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கியபோது முத்துமணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்துமணி என்கின்ற தொத்தல் முத்துமணி சிறுவன் குபேந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு சிறுவன் குபேந்திரன் மீனாட்சியம்மன் கோயில் கார் பார்க்கிங் அருகே நின்றிருந்தபோது அங்கு 2 பைக்குகளில் வந்த முத்துமணி மற்றும் அவனது தம்பி ராஜ் மற்றும் சதீஷ் குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் குபேந்திரனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
மேலும், சிறுவன் குபேந்திரன் அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்த போதும் விடாமல் விரட்டிச் சென்ற முத்துமணி கும்பல் சிறுவனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது. மேலும், கொலை செய்த கும்பலானது அங்கிருந்து தப்பியோடியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றிய விளக்குத்தூண் போலீஸார், உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சிறுவன் மீதும் ஆயுதம் வைத்திருத்தல் உட்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ள மீனாட்சி அம்மன் கோவில் அருகே இதுபோன்ற சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதை தடுக்க, காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.