

சென்னை: 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ காயம் அடைந்தார். இந்த விபத்தில் சிறுவனையும், அவனுக்கு பைக் கொடுத்த தந்தையையும் போலீஸார் கைது செய்தனர்.
குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், சென்னை முழுவதும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு எஸ்ஐ முத்துகிருஷ்ணன், தலைமைக் காவலர் கீத்குமார், ஊர்காவல்படை வீரர் கோகுல் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார் நேற்றுமுன்தினம் இரவு டி.பி.சத்திரம் போலீஸ் பூத் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அதிகாலை 2 மணியளவில் அந்த வழியாக பைக் ஒன்று அதிவேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த தனிப்படை போலீஸார், அந்த பைக்கை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த அந்த பைக் சிறப்பு எஸ்ஐ முத்துகிருஷ்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் முத்து கிருஷ்ணனுக்கு தலையின் பின்பகுதி, இரண்டு கண்களுக்கு அருகில் மற்றும் இடது தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக சக போலீஸார் அவரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து, கீழ்ப்பாக்கம் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டியது 15 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த சிறுவனை கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். மேலும், உரிய ஓட்டுநர் வயது எட்டாத சிறுவனிடம் பைக்கை ஒப்படைத்து ஓட்ட அனுமதித்த குற்றத்துக்காக, வாகனத்தின் உரிமையாளரான சிறுவனின் தந்தையையும் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸ் எச்சரிக்கை
வாகன ஓட்டிகள் பொறுப்புடன் வாகனங்களை ஓட்டவும், போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை முறையாக பின்பற்றவும், வாகனம் ஓட்டும் போது எப்போதும் மனித உயிர்களின் மதிப்பை உணர்ந்தும் செயல்பட வேண்டும்.
மேலும், உரிய வயது அடையாத (மைனர்) பிள்ளைகளை வாகனங்களை ஓட்ட ஊக்குவிக்கவோ அல்லது அதற்கு துணையாகவோ இருக்க வேண்டாம். மீறினால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.