மத்திய அரசு மானியத்தில் வழங்கிய யூரியா கடத்தல்: கரூரில் 837 மூட்டைகள் பறிமுதல் - 2 பேர் கைது

செம்பியநத்தம் ஊராட்சி நல்லூரான்பட்டி அருகே தனியார் நிலத்தில் உள்ள தகரக் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மத்திய அரசின் மானிய  யூரியா உரம்.

செம்பியநத்தம் ஊராட்சி நல்லூரான்பட்டி அருகே தனியார் நிலத்தில் உள்ள தகரக் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மத்திய அரசின் மானிய யூரியா உரம்.

Updated on
1 min read

கரூர்: கரூர் அருகே மத்திய அரசு மானியத்தில் வழங்கும் யூரியா உர மூட்டைகளை வேறு சாக்குகளில் மாற்றி, வெளியூர்களுக்கு கடத்த முயன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் செம்பியநத்தம் ஊராட்சி நல்லூரான்பட்டி அருகே தனியார் நிலத்தில் உள்ள தகரக் கொட்டகையில் மத்திய அரசின் மஞ்சள் நிறப் பைகளில் இருந்த யூரியா உரம், ‘டெக்னிக்கல் கிரேடு யூரியா பார் இண்டஸ்ட்ரியல் யூஸ் ஒன்லி’ என அச்சிடப்பட்டிருந்த வெள்ளை நிற சாக்குகளில் மாற்றப்பட்டு, அவை லாரிகளில் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வீ த லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகிகள் நவீன்குமார் தலைமையில் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று பார்த்தனர். அப்போது, இவர்களை கண்டதும் அங்கிருந்தவர்கள் சென்றுவிட்டனர்.

இதையடுத்து அவசர போலீஸ் எண் 100-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாலவிடுதி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை நவீன்குமார் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதையடுத்து, தகவலறிந்து வேளாண் இணை இயக்குநர் மல்லிகா, துணை இயக்குநர் அரவிந்தன், தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் மணிகண்டன் உள்ளிட்ட வேளாண் துறை அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

வேளாண் துறை அளித்த புகாரின்பேரில், இடத்தின் உரிமையாளர் தங்கவேல்(55), லாரி ஓட்டுநர் செந்தில் முருகன்(45) ஆகிய இருவரையும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தகரக் கொட்டகையில் 837 மூட்டைகளில் இருந்த 37 டன் உரத்தை கைப்பற்றி பாலவிடுதி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கிடங்குக்கு அனுப்பிவைத்தனர்.

மத்திய அரசு மானியத்தில் வழங்கப்படும் யூரியா உரம் கேரளம், சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>செம்பியநத்தம் ஊராட்சி நல்லூரான்பட்டி அருகே தனியார் நிலத்தில் உள்ள தகரக் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மத்திய அரசின் மானிய  யூரியா உரம்.</p></div>
குஜராத்தில் ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in