

திருச்சி / அணைக்கட்டு: திருச்சியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 7 சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீஸார்கைது செய்தனர். இதேபோல் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பாலக்கரை காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த மாதம் காணாமல் போனார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர். இந்நிலையில், அந்தச் சிறுமியை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தபோது, அந்தச் சிறுமி பெற்றோருடன் செல்ல மறுத்தார். இதைத் தொடர்ந்து, சிறுமியை குழந்தைகள் காப்பகத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.
குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி, தனக்கு சிலர் பாலியல் தொந்தரவு அளித்ததாக அங்குள்ளவர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் காப்பக நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர் சிறுமியை சந்தித்து விவரத்தை கேட்டறிந்தனர்.
அப்போது, தன்னுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிலர், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமி குழுவினரிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விரிவான விசாரணை நடத்துமாறு அளித்த புகாரின்பேரில், கோட்டை மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முதலியாசத்திரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர், மோகன்ராஜ் மற்றும் 7 சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியிடம் பழகி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கோட்டை மகளிர் போலீஸார் நேற்று கைது செய்தனர். சிறுவர்களை தஞ்சாவூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற இருவரை திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
சிறுமி கர்ப்பம்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே 14 வயது சிறுமி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். வேலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்ததில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த காதர் பாட்சா, இதயத்துல்லா ஆகியோர் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.