

சென்னை: திருவொற்றியூரில் மாணவர்கள் இடையிலான முன் விரோதம் காரண மாக பிளஸ் 2 மாணவர் கொலை செய்யப்பட்டார். அவர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 மாணவருக்கும், வயதில் மூத்த பிளஸ் 1 மாணவருக்கும் யார் சீனியர் என்பதில் மோதல் இருந்துள்ளது.
இந்நிலையில், பிளஸ் 2 மாணவர் நேற்று பள்ளிக்கு வரவில்லை. அவரது வகுப்பு நண்பரான திருவொற்றியூர் தனுஷ் (16) என்ற மாணவர் மாலை 4.15 மணி அளவில் அதே பகுதியில் உள்ள அஜாக்ஸ் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் நின்றிருந்தார்.
இதை அறிந்த பிளஸ் 1 மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்து சரமாரியாக தாக்கியதில் மாணவர் தனுஷ் உயிரிழந்தார். தகவல் கிடைத்து வந்த திருவொற்றியூர் போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டி கொலை
தியாகராய நகர் குப்புசாமி தெருவைச் சேர்ந்தவர் ராதா (80). கணவர் காலமாகி விட்டதால், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டுக்குள் அவர் இறந்து கிடப்பதாக, அவரது வீட்டு பணிப்பெண் அம்மு (31), போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.
பாண்டிபஜார் போலீஸார் விசாரணை நடத்தியதில், மூதாட்டி அணிந்திருந்த 15 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அம்முவிடம் தீவிர விசாரணை நடத்தியதில், 2 பேருடன் சேர்ந்து தலையணையால் முகத்தை அமுக்கி மூதாட்டியை கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீஸார், 2 கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.