

தாம்பரம்: ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து, சுமார் ரூ.9 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தாம்பரம் அருகே சோமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட புதுப்பேர் கிராமம், ஸ்ரீபெரும்புதூர் மெயின் ரோட்டில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்துக்குள் புகுந்துள்ளனர்.
பின்னர் கேஸ் வெல்டிங் கருவியை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்த சோமங்கலம் காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் எத்தனை பேர் வந்தனர், அவர்கள் பயன்படுத்திய வாகனம் எது, கொள்ளை சம்பவத்தின்போது பதிவான காட்சிகளில் அவர்களின் உருவம் தெளிவாக உள்ளதா என ஆய்வு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தாம்பரம் காவல் மாவட்ட துணை ஆணையர் கார்த்திகேயன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் மர்ம நபர்களை பிடிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தின் சரியான அளவு, பணம் நிரப்பப்பட்ட நேரம் உள்ளிட்ட விவரங்களையும் போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
கேஸ் வெல்டிங்கை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடித்துள்ளதால், திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைதுசெய்ய சோமங்கலம் போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.