

திவ்ய தர்ஷினி, குமார், சசிகலா
சென்னை: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி செவிலியர் உள்ளிட்ட பலரிடம் சுமார் ரூ.20 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரைச் சேர்ந்த சித்ரா (28), தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை சேத்துப்பட்டு மங்களாபுரத்தைச் சேர்ந்த சசிகலா (40) என்பவர் சிகிச்சைக்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது சித்ராவிடம் அறிமுகமான சசிகலா, தனக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் செல்வாக்கு இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
சசிகலாவின் பேச்சை நம்பிய சித்ரா, பல தவணைகளாக ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். மேலும், தனது நண்பர்களான சக்தி பாலனுக்கு சுகாதாரத் துறை ஆய்வாளர் வேலையும், கீதாவுக்கு சத்துணவுத் துறையில் வேலையும் பெற்றுத் தருமாறு கோரி, அவர்களையும் சசிகலாவிடம் அறிமுகம் செய்துள்ளார்.
இதற்காக சக்தி பாலனிடம் ரூ. 9 லட்சமும், கீதாவிடம் ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை சசிகலா வாங்கியதாகத் தெரிகிறது.
தேர்தல் முடிந்ததும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி காலம் கடத்திய சசிகலா, அதன் பிறகு சித்ராவின் அழைப்புகளைத் தவிர்க்கத் தொடங்கினார்.
சந்தேகமடைந்த சித்ரா, சசிகலாவின் வீட்டுக்கு நேரில் சென்று பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார். அப்போது சசிகலா, “பணத்தைத் தர முடியாது, மீறி கேட்டால் கூலிப்படையை வைத்து உன்னைக் கொன்று விடுவேன்” என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சித்ரா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர்.
சசிகலா, அவருக்கு உடந்தையாக கணவர் குமார் (43) மற்றும் குமாரின் தங்கை திவ்யதர்ஷினி (22) ஆகியோரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், சசிகலாவும், திவ்யதர்ஷினியும் ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளர்களாகப் பணியாற்றி வந்ததும், குமார் உணவு டெலிவரி ஊழியராக இருந்ததும் தெரியவந்தது.