

தாம்பரம்: சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனியைச் சேர்ந்த முனுசாமியின் மகன் அஜித் (26). இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த செப்.30-ம் தேதி ஆட்டோ திருடுபோனது தொடர்பாக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய அஜித்தைப் பிடிப்பதற்காக, குற்றப்பிரிவு ஆய்வாளர் தர் தலைமையிலான போலீஸார், நேற்று அதிகாலை புழல் காவாங்கரை பகுதிக்குச் சென்றனர்.
அஜித்தை போலீஸார் பிடிக்க முயன்றபோது, அவர் தன்னிடம் இருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்குக் கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்டன. தொடர்ந்து அஜித்தை பீர்க்கன்கரணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.