

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.ஐ. சங்கரை நலம்விசாரித்த காவல் கண்காணிப்பாளர் அனிதா.
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ரவுடி வெள்ளைக் காளியை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி அழகு ராஜா நேற்று அதிகாலை போலீஸார் மீது வெடிகுண்டை வீச முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
மதுரை காமராஜபுரம் முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து என்ற வெள்ளைக் காளி(40). மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் கொட்டு ராஜா என்கிற அழகுராஜா(30). பிரபல ரவுடிகளான இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்துள்ளது. இரு தரப்பிலும் 10-க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளைக் காளி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அழகுராஜா ஜாமீனில் வெளியே இருந்தார். இதனிடையே, திண்டுக்கல் நீதிமன்றத்தில் வெள்ளைக் காளியை ஆஜர்படுத்திய போலீஸார் மீண்டும் சென்னை புறப்பட்டனர். வழியில், பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே 15 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெள்ளைக் காளியை கொல்ல முயன்றது. பாதுகாப்புக்கு வந்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அந்த கும்பல் தப்பியோடியது. இதில் 3 போலீஸார் காயமடைந்தனர்.
இந்த கும்பலைப் பிடிப்பதற்காக பெரம்பலூர் எஸ்.பி. அனிதா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், நாட்டு வெடிகுண்டு வீசியவர்களில் சிலர் ஊட்டியில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்து, அழகுராஜா மற்றும் அவருடன் இருந்த கார்த்திக்(29), அலெக்ஸ் பாண்டியன்(24), அரவிந்த்(29), வினோத்குமார்(34), பாண்டி முனீஸ்வரன்(27), நிர்மல்குமார் (26) ஆகியோரைக் கைது செய்து, பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர். அழகுராஜாவின் உறவினர்கள் குருசாமி, மணி ஆகியோரை வெள்ளைக் காளி சிறையில் இருந்தவாறே கொலை செய்ய திட்டமிட்டிருப்பது தெரியவந்ததால், தாங்கள் வெள்ளைக் காளியை கொல்ல முயன்றதாக அழகுராஜா தரப்பினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், கொலை முயற்சிக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், மீதமிருந்த நாட்டு வெடிகுண்டுகளை திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே பதுக்கி வைத்திருப்பதாக அழகுராஜா தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் நேற்று அதிகாலை அழகுராஜாவை அங்கு அழைத்துச் சென்றனர். அப்போது, திடீரென அழகுராஜா நாட்டு வெடிகுண்டை போலீஸார் மீது வீசியுள்ளார். அது போலீஸ் வாகனம் மீது விழுந்து வெடித்தது.
இதையடுத்து, குன்னம் எஸ்.ஐ. சங்கர், அழகுராஜாவைப் பிடிக்க முயன்றார். அப்போது அழகுராஜா அரிவாளால் சங்கரின் கையில் வெட்டிவிட்டு தப்பியோடினார். உடனே, மங்களமேடு ஆய்வாளர் நந்தகுமார் துப்பாக்கியால் சுட்டதில், அழகுராஜா குண்டு பாய்ந்து உயிரிழந்தார். காயமடைந்த எஸ்.ஐ. சங்கர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், எஸ்.பி. அனிதா ஆகியோர் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
நீதிபதி விசாரணை: பின்னர், குன்னம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜசேகர், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அழகுராஜாவின் உடல் நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், அழகுராஜாவுடன் கைது செய்யப்பட்ட மற்ற 6 பேரையும் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், பின்னர் சிறையில் அடைத்தனர்.