

கள்ளக்குறிச்சி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் செல்வம் (47), சரக்கு வாகன ஓட்டுநர். இவர் நேற்று மீன்களை ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கிச் சென்றார். விழுப்புரம் நகரத்திற்குள் செல்ல மறந்து புறவழிச்சாலையில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தார். பின்னர், விழுப்புரம் செல்வதற்காக விக்கிரவாண்டி அருகே சாலையில் திடீரென வாகனத்தை நிறுத்தினார்.
அப்போது சென்னை நோக்கி சென்ற கார் திடீரென சாலையில் நின்ற மீன் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கபாய் (60), கார் ஓட்டிச் சென்ற ஜான் பிரிட்டோ (33), அரும்பாக்கம் ராஜ்குமார் மகள் எவஞ்சலின் (6) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் லதா கிறிஸ்டி, ராஜ்குமார், ஜெசிஹனா ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விக்கிரவாண்டி போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.