

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், பெங்களூரில் இருந்து தேர்தலில் வாக்களிக்க ஊர் சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வீரமணி (25) என்பவர் சிப்ஸ் கடை நடத்தி வந்தார். அவருடன் அதே பகுதியில் உள்ள சிப்ஸ் கடைகளில் வேலை செய்து வந்த பிரதீப் மற்றும் மாரி, சதீஷ் குமார் ஆகியோர் தமிழகத்தில் நடைபெற்ற வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊரான பென்னாகரத்திற்கு காரில் புறப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதி வழியாக கார் சென்று கொண்டிருந்தது. அப்போது உடுமலைபேட்டையில் இருந்து ஓசூர் நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்தும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர மோதலில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த வீரமணி (25), பிரதீப், மாரி ஆகிய மூன்று இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்களுடன் பயணித்த சதீஷ் குமார் (25) என்பவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் தற்போது சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உத்தனப் பள்ளி போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலில் வாக்களிக்க ஆர்வத்துடன் ஊருக்குச் சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.