தேன்கனிக்கோட்டை: புதையல் தேடி வனப் பகுதியில் பூஜை - 7 பேருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்

Updated on
1 min read

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் புதையல் இருப்பதாகக் கூறி, பூஜை செய்த 7 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னகல்லுப்பள்ளி வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் சுற்றித் திரிவதாக வனச்சரகர் முரளிதரனுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச்சரகர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வனப்பகுதியில் 7 பேர் பூஜைகள் செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், அப்பகுதியில் புதையல் இருப்பதாகவும், அதை எடுப்பதற்காக பூஜைகள் செய்வதாகவும் தெரிவித்தனர்.

விசாரணையில், தடிக்கல்லைச் சேர்ந்த முத்துராஜன் (63), ராமன் (47), சித்தலிங்கம் கொட்டாயைச் சேர்ந்த மாரப்பா (45), தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த குமார் (40), சின்னமாது (57), உனிசெட்டியைச் சேர்ந்த ஜெயராமன் (48) உள்ளிட்ட 7 பேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக 7 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. பின்னர், அவர்களை வனத்துறையினர் விடுவித்தனர்.

தேன்கனிக்கோட்டை: புதையல் தேடி வனப் பகுதியில் பூஜை - 7 பேருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்
ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் முழுவதுமாக தள்ளுபடி: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in