

சென்னை: கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (35). உடல் நலக்குறைவு காரணமாக,சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
ரவிக்குமார் நேற்றுமுன்தினம் அதிகாலை மருத்துவமனை யில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, அவர் அருகில் வைத்திருந்த செல்போனை, 2 பேர் திருடிக் கொண்டு தப்பி ஓடினர். இதைப் பார்த்த ரவிக்குமார் உடனடியாக கூச்சலிட்டார்.
அவரது சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் தப்ப முயன்ற இருவரையும் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், அவர்களை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிடிபட்டவர்கள் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (35), சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (52) என்பது தெரிந்தது.
செல்போன்கள் பறிமுதல்
இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.