

செங்கல்பட்டு: கேளம்பாக்கம் அருகே நாவலூரில் சாமுண்டீஸ்வரி நகர் உள்ளது. இதில் 2-வது தெருவில் அதே ஊரைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான 3 வீடுகள் உள்ளது. இதில் தனித்தனி குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.
ஒரு குடியிருப்பில் முருகன் (55) என்பவரும், அடுத்த குடியிருப்பில் வைரமுத்து (40) என்பவர் தனது மனைவி செல்வி (40), மகன் பிரதீப் (7) ஆகியோருடன் வசிக்கிறார்.
மற்றொரு குடியிருப்பில் சஞ்சீவ் குமார் (31), மனைவி சோனியா (27), மாமியார் சித்ரா (46), மைத்துனி சுதா, மகள் கிருஷிகா, மகன் தீரன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இதில் வைரமுத்து என்பவர் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள தனியார் மேன்சன்களில் உள்ளவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இதனால் வீட்டில் ஏராளமான காஸ் சிலிண்டர்களை வைத்திருப்பார்.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் வைரமுத்து வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தபோது, காஸ் கசிவு வாசனை வந்ததால் வைரமுத்துவின் மனைவி செல்வி எழுந்து மின் விளக்கை போட்டுள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
இதில் அவர்களின் வீடு முழுவதுமாக இடிந்து வைரமுத்துவின் மகன் பிரதீப் உடல் முழுவதும் கருகிய நிலையில் வெளியே ஓடி வந்தான். பக்கத்து குடியிருப்பில் தூங்கிக் கொண்டிருந்த சஞ்சீவ்குமார் (30), அவரது மனைவி சோனியா (28), மகள் கிருஷிகா (4), மகன் தீரன் (ஒன்றரை வயது), மாமியார் சித்ரா (55) ஆகியோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
முன் குடியிருப்பில் இருந்த முருகனும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினார். பயங்கர சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது சிறுவன் பிரதீப் தீக்காயங்களுடன் வெளியே வந்தான்.
மற்றவர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டனர். இதில் உடல் நசுங்கி சஞ்சீவ்குமாரின் மகள் கிருஷிகா (4), மகன் தீரன் (ஒன்றரை வயது) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து சிறுசேரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடல்களை மீட்டனர். மேலும், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய மற்ற 7 பேரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் படூர் தனியார் மருத்துவமனைக்கும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தாழம்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு. பின்னர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.