

சென்னை: தொழில் வரி செலுத்துவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் பாபு(49).
அதே பகுதி 9-வது அவென்யூவில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வரி செலுத்துதல் தொடர்பாக, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோவிலம்பாக்கம், ஓம் சக்தி நகரைச் சேர்ந்த பிரபு(43) என்பவரை நியமனம் செய்து, நிறுவனத்தின் வரியை செலுத்தி வந்தார்.
அதன்படி, பிரபுவிடம் கடந்த 2024-ம் ஆண்டு ரூ.2.13 லட்சம் மற்றும் 2025-ம் ஆண்டு ரூ.3.38 லட்சம் என மொத்தம் ரூ.5.51 லட்சத்தை வரி செலுத்துவதற்காக பாபு கொடுத்துள்ளார்.
இதையடுத்து, இதற்கான 2 பில் ரசீதுகளை பாபுவுக்கு வாட்ஸ்அப் மூலம் பிரபு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையே, பாபு 2 ஆண்டுகளாக தொழில் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக தொழில் வரி நிறுவனத்திடம் இருந்து தகவல் வந்தது.
அதிர்ச்சியடைந்த பாபு, இதுகுறித்து விசாரித்தபோது, ரூ.5.51 லட்சம் பெற்றுக் கொண்ட பிரபு, ரூ.51 ஆயிரம் மட்டும் தொழில் வரி செலுத்தி ரூ.5 லட்சத்தை மோசடி செய்துள்ளார்.
அதோடு போலியான ரசீதுகளை தயார் செய்து அனுப்பியது தெரிய வந்தது. இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் பாபு புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து பிரபுவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.