

சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் ஏசி இயங்காத நிலையில், ஓடுபாதையில் விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் 4 மணி நேரமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 198 பயணிகளுடன் நேற்று காலை 7.20 மணிக்கு புறப்படத் தயாரானது. விமானம் ஓடுபாதையில் ஓடுவதற்கு தயாரானபோது, விமானத்துக்குள் ஏசி வேலை செய்யாததால், பயணிகள் கூச்சல் போட்டனர்.
இதையடுத்து, விமானத்தில் கோளாறு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு விமானி கீழே இறங்கிச் சென்றுவிட்டார். விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன.
சிறிது நேரத்தில் விமானத்தின் கோளாறு சரிசெய்யப்பட்டதால், விமானம் புறப்படும் என்று பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நீண்ட நேரமாகியும் விமானத்தை இயக்க விமானி வராததால், பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே தவித்தனர்.
அப்போது மீண்டும் ஏசி நிறுத்தப்பட்டதால், விமானத்தின் திறந்திருந்த கதவுகள் வழியாக பயணிகள் கீழே இறங்க முயற்சி செய்தனர். ஆனால், விமானத்தில் லேடர் பொருத்தப்படாததால் கீழே இறங்க முடியவில்லை.
அதனால் பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விமானத்தில் ஏசி மீண்டும் இயங்க தொடங்கினாலும், விமானி வராததால் 4 மணி நேரத்துக்கு மேலாக விமானத்துக்குள்ளேயே அமர்ந்திருந்தனர்.
ஒருகட்டத்தில் விமானத்திலிருந்து கீழே குதித்துவிடுவோம் என்று பயணிகள் தெரிவித்தனர். அங்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பயணிகளை மிரட்டி விமானத்துக்குள் அனுப்பினர். பின்னர் விமானி வந்ததும், பகல் 11.40 மணிக்கு விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது.
நடந்த சம்பவங்களை பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து, இதுகுறித்து இந்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.