

கோவை: கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியின் 10-வயது மகள், கடந்த 21-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக், நண்பர் மோகன்ராஜ் ஆகியோரை போக்சோ மற்றும் கடத்தல் பிரிவுகளில் வழக்கு பதிந்து சூலூர் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற கார்த்திக் மாடியில் இருந்து கீழே குதித்ததில் அவரது கால், கை முறிந்தது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி தலைமையில் நேற்றுமுன்தினம் மாலை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தயாரிப்புப் பணியை தீவிரப்படுத்துதல், கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தல், இந்த வழக்குக்கு தேவையான அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டுதல், வழக்கு தொடர்பாக கண்டறியப்பட்ட சாட்சிகளை முறைப்படுத்தி விசாரணைக்கு ஆஜர்படுத்த நட
வடிக்கை எடுத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிறுமி கடத்தப்பட்ட இடம், அடைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடம், சடலமாக மீட்கப்பட்ட இடம் ஆகிய இடங்களில் போலீஸார் ஆய்வு நடத்தி தகவல்களை சேகரித்து வருகின்றனர்.